Thursday, June 14, 2012

நீ இன்னும் அழகாய்த்தான் இருக்கின்றாய்






இன்று போல் தான்
ஒரு மழை நாளில்
அன்று
நீயும் நானும் சந்தித்திருந்தோம்

வானம்
இருண்டு கிடந்தது
இடியின் ஓசை....
பறவைகளின் கீச்சொலி....
தவளைகளின் சத்தம்....
மரங்களில் காற்றொலி....
இவை எல்லாம் எனக்குப் பிடித்திருந்தது
உன்னைப் போலவே..


வான வெளியிலே தோன்றும்
ஒரு மின்னல் கீற்றென – பளிச்சென்று
நீ அழகாய் இருந்தாய்

நானும் அழகாய்த்தான் இருந்தேன்
ஆனாலும் அன்று
வானம் இருண்டு கிடந்தது
இன்றும் அப்படித்தான்

வானம் இருண்டு கிடக்கின்றது
அதே இடியின் ஓசை...
பறவைகளின் கீச்சொலி...
தவளைகளின் சத்தம்...
மரங்களில் காற்றொலி...
அப்படியேதான் இருக்கின்றது

நீ மட்டும் அருகில் இல்லை.
வானம் இருண்டு கிடக்கின்றது. – என்
வாழ்க்கை வானம் இருண்டு கிடக்கின்றது

நீ..............
இன்னும்.... இன்னும்.... இன்னும்....
அழகாய்த்தான் இருக்கின்றாய்
நானோ.....?



Thursday, June 7, 2012

மண்ணில் தஞ்சம்







நினைக்கின்ற நேரம் எல்லாம் - உன்
நினைவின்றி ஏதும் இல்லை - உனைக்
காதலித்த நாள் முதலாய் - என்னில்
உனக்கேனோ இரக்கமில்லை


வாழ்கின்ற காலம் எல்லாம் - நான்
உனக்காக வாழுகின்றேன்
எனைக் காண்கின்ற நேரம் எல்லாம் - நீ
எதற்காக ஓடுகின்றாய்

காண்கின்ற கனவில் எல்லாம் - என்றும்
நீதானே தோன்றுகின்றாய்
என் உயிர்விடும் மூச்சில் எல்லாம் - அன்பே
நீதானே வாழுகின்றாய்

பார்க்கின்ற பக்கம் எல்லாம்
தோன்றுவதோ உந்தன் விம்பம்
என்
காதலை ஏற்றுக்கொள்ள
உனக்கென்ன இந்த ஜம்பம்

போகின்ற இடங்களெல்லாம் - நான்
உனைத்தானே தேடுகின்றேன்
உனைப் பாராத பொழுதில் எல்லாம் - என் 
இதயம் வாடுகின்றேன்

மறுத்தாலும் வெறுத்தாலும் - நீ
என்றும் எந்தன் சொந்தம்
உன் காதல் இல்லை என்றால் - என்
உடல் மண்ணில் தஞ்சம்.







Sunday, June 3, 2012

பார்வைத் தீ







நேற்றுவரை
கல்லாய்த்தான் கிடந்தேன்
அகலிகை போல

அவள்......
உயிர் பெற்றெழுந்தாள்
இராமன் பாதம் பட்டதனால்

நானோ....
பற்றி எரிகின்றேன்
உன்
பார்வைத் தீ பட்டதனால்.