Friday, March 2, 2012

என் தாய்த்தமிழே...






வண்ணப்பட்டெதற்கு
அரிதாரம் தானெதற்கு----என்றும்
எம் ஜீவநதியான செம்மொழியே!
என் தாய்த்தமிழே!
சுந்தரத் தமிழழகே!

அன்னையவள் தாலாட்டினிலே
பாசத்தமிழ் - தவளும்
மழழைகளின் இதழ்களிலே
கொஞ்சும் தமிழ் - அவர்
கைவீசி நடக்கையிலே
பிஞ்சுத் தமிழ் - பள்ளியிலே
கல்வி பயில்கையிலே
அறிவுத்தமிழ் - பின்பு
பண்புடனே பழகையிலே
பண்புத் தமிழ் - நல்ல
மாண்பு மிக்க தோழமையில்
அன்புத் தமிழ் - இனிய
காதலெனும் சோலையிலே
கவிதைத் தமிழ் - இன்னும்
காதலரின் ஊடலிலே
கெஞ்சு தமிழ் - அவர்
ஊடல் விட்டு கூடயிலே
மஞ்சு தமிழ்
உலகில் உள்ள மொழிகள் எல்லாம்
விஞ்சு தமிழ்
கலைஞர்களின் நெஞ்சினிலே
மூன்று தமிழ்

பாவலரின் பாட்டினிலே
செந்தமிழர் வீட்டினிலே
தென்றலதின் ஓசையிலே
நின்றொலித்த இன்பத்தமிழ்

வீரம் விழைந்த தமிழ்
பள்ளு தமிழ்
அன்புத்தமிழ்
வம்புத்தமிழ்
நையாண்டி செய்த தமிழ்
கல்தோன்றா மண்தோன்றா
காலத்தே முன்தோன்றி
வாழ்வாங்கு வாழும் எங்கள்
மூத்த தமிழ்
அகிலம் எல்லாம் அதிரவைத்த
பொங்கு தமிழ்

முறம் எடுத்துப் புலி அடித்து
விரட்டிவைத்த தமிழ் மகளின்
வாயினிலே வந்துதித்த
மறத்தமிழே!
இன்று நீ.............

ஆடவரும் அரிவையரும்
நுனிநாக்கில் அரிவாள் எடுக்க
உயிர் துடிக்க உளம் கொதிக்க
குற்றுயிராய்ப் போன தமிழ்
அரைகுறையாய்த் தேய்ந்த தமிழ்
'தமிங்கலமாய்' ஆன தமிழ்

'மெல்லத் தமிழ் இனிச் சாகும்'
என்று கூறிவைத்த
பாரதி சொல் பொய்க்குமா?
இல்லை......
என் தாய்த்தமிழ் தான்
மாய்க்குமோ?
யாரறிவார் இன்று?

No comments:

Post a Comment