Thursday, March 29, 2012

எப்போதும் எனக்குள்தான் நீ...





வழுக்குப்பாதையில்
எண்ணெய் பூசிக்கொண்டு
ஏற முயற்சி செய்யும்
முடவன் போல
மீண்டும் மீண்டும்
உன் நினைப்பில் நான்



உன்னை நினைக்கும்
ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும்
என் இதயத்தின் வழியே
ஒரு திராவகம் வழிந்தோடிய படியே


நீயோ

தொடமுடியாத தொலை தூரத்தில்
ஒரு புள்ளியாய்
நானோ
இங்கே சிறு பூச்சியமாய்

உலகமே ஒரு பூச்சியம் தானே
பூச்சியத்தில் தானே எல்லாமும் அடக்கம்
ஆதலால் இல்லை பாதகம்
எப்போதும்
எனக்குள்தான் நீ.


Sunday, March 11, 2012

அக்கினிக் குஞ்சுகள்




அனல் தகிக்கும்
பாலை வனத்தில் கூட
ஒருமுறையேனும்...
வெள்ளம் பாய்வதுண்டு

பிரிய சகி....
நீ உன்
நெஞ்சுக் கூட்டுக்குள்
அக்கினிக் குஞ்சுகளையா
அடைகாத்து வைத்திருக்கின்றாய்?

உன்னை
நினைக்கும் போதெல்லாம்
நான் வெந்து விடுகின்றேனே
உன்னை
நெருங்கும் போதெல்லாம்
பனிக்கட்டியாய் உருகிவிடுகின்றேனே

Thursday, March 8, 2012

என்னையும் ஏதாவது ஒன்றாய்...






உன்.....மின்னல் விழிகளின் வழியே
என் இதயத்தில்
இடியை இறக்கிய
ஆழகிய அரக்கி நீ...

அன்று நீ – என்
இதயத்தில் அறைந்த வார்த்தைகள்
எனக்கு வேதனை கொடுப்பினும்
இன்னும் என் மனதினில்
பசுமையான நினைவுகளாய்...

இருந்தும் என் மனதிற்குள்
ஏதேதோ ஆசைகள் பல...

உன் பூவிதழ்களில் தவழ்ந்திடும்
புன்னகையாய் இருக்கக்கூடாதா....... நான்?
உன் விழிகளை மூடும்.....
இமைகளாக இருக்கக்கூடாதா....... நான்?
உன் உடல்தனைத் தழுவிடும்
நூல் உடையென இருக்கக்கூடாதா....... நான்?

உன்னை காணதபோது – நான் என்
மனதிற்குள் எடுக்கும் உறுதியெல்லாம்
உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
தவிடு பொடியாய்...

தறி கெட்ட மனதிற்கு
தாள்பாள் போட்டா தடுத்துவிடமுடியும்?
என் மனமோ....... நித்தமும் அலைவதோ
உன் தாழ்கள் தேடித்தானே

அடியே!
என் மனதைச் சிதறடித்த
அழகிய அரக்கியே!

நீ..... தனியே எங்கும்
நடக்கும் போதெல்லாம் - என்
இதயம் துடியாய்த் துடிக்கிறது

இனியாவது...
என்னையும் உன்னோடு கூட்டிச்செல்
நீ போகும் இடம் எல்லாம்
கூடவே போட்டுச் செல்லும்
பாதணியைப் போல
என்னையும்.....
ஏதாவது ஒன்றாய்.






Friday, March 2, 2012

என் தாய்த்தமிழே...






வண்ணப்பட்டெதற்கு
அரிதாரம் தானெதற்கு----என்றும்
எம் ஜீவநதியான செம்மொழியே!
என் தாய்த்தமிழே!
சுந்தரத் தமிழழகே!

அன்னையவள் தாலாட்டினிலே
பாசத்தமிழ் - தவளும்
மழழைகளின் இதழ்களிலே
கொஞ்சும் தமிழ் - அவர்
கைவீசி நடக்கையிலே
பிஞ்சுத் தமிழ் - பள்ளியிலே
கல்வி பயில்கையிலே
அறிவுத்தமிழ் - பின்பு
பண்புடனே பழகையிலே
பண்புத் தமிழ் - நல்ல
மாண்பு மிக்க தோழமையில்
அன்புத் தமிழ் - இனிய
காதலெனும் சோலையிலே
கவிதைத் தமிழ் - இன்னும்
காதலரின் ஊடலிலே
கெஞ்சு தமிழ் - அவர்
ஊடல் விட்டு கூடயிலே
மஞ்சு தமிழ்
உலகில் உள்ள மொழிகள் எல்லாம்
விஞ்சு தமிழ்
கலைஞர்களின் நெஞ்சினிலே
மூன்று தமிழ்

பாவலரின் பாட்டினிலே
செந்தமிழர் வீட்டினிலே
தென்றலதின் ஓசையிலே
நின்றொலித்த இன்பத்தமிழ்

வீரம் விழைந்த தமிழ்
பள்ளு தமிழ்
அன்புத்தமிழ்
வம்புத்தமிழ்
நையாண்டி செய்த தமிழ்
கல்தோன்றா மண்தோன்றா
காலத்தே முன்தோன்றி
வாழ்வாங்கு வாழும் எங்கள்
மூத்த தமிழ்
அகிலம் எல்லாம் அதிரவைத்த
பொங்கு தமிழ்

முறம் எடுத்துப் புலி அடித்து
விரட்டிவைத்த தமிழ் மகளின்
வாயினிலே வந்துதித்த
மறத்தமிழே!
இன்று நீ.............

ஆடவரும் அரிவையரும்
நுனிநாக்கில் அரிவாள் எடுக்க
உயிர் துடிக்க உளம் கொதிக்க
குற்றுயிராய்ப் போன தமிழ்
அரைகுறையாய்த் தேய்ந்த தமிழ்
'தமிங்கலமாய்' ஆன தமிழ்

'மெல்லத் தமிழ் இனிச் சாகும்'
என்று கூறிவைத்த
பாரதி சொல் பொய்க்குமா?
இல்லை......
என் தாய்த்தமிழ் தான்
மாய்க்குமோ?
யாரறிவார் இன்று?